வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 -24 நிதிஆண்டுக்கான ஐடிஆர் தாக்கலுக்கான காலக்கெடுவில் நீட்டிப்பு இல்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இன்று ஐடிஆர் தாக்கல் செய்யாவிட்டால், வரி செலுத்தும் நபர்கள் பழைய வரி முறையின் கீழ் சலுகைகள் பெற முடியாது. தாமதமாக தாக்கல் செய்வதற்கு அபராதமும் செலுத்த நேரிடும்.
நாடு முழுவதும் கடந்த 26-ம் தேதி வரையில் 5 கோடி ஐடிஆர் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து வருமான வரித் துறை வெளியிட்ட எக்ஸ் பதிவில்,“ஜூலை 26-ம் தேதி வரையில், 2023 – 24 நிதி ஆண்டுக்கான 5 கோடி ஐடிஆர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் எப்படி தாக்கல் செய்வது…?
முதலில் வருமான வரித்துறையின் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணையதள பக்கத்தில் ITR-1 படிவத்தை நிரப்பி, வருமான வரி தாக்கல் செய்யலாம். லாகின் செய்வதற்கு முன்பு பார்ம் 16, பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு விவரங்கள், வரி விலக்குகளுக்கான முதலீட்டு ஆவணங்கள் ஆகியவற்றை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். வருமான வரி இணையதளத்திற்கு புதிதாக சென்றால், கேட்கப்பட்டுள்ள விவரங்களை கொடுத்து, பதிவு செய்து கொள்ள வேண்டும். பழையவர்கள் என்றால், PAN எண்ணை பயன்படுத்தி உள்ளே நுழைய வேண்டும்.