2023 -2024 கல்வியாண்டில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா இன்று நடைபெற உள்ளது.
கடந்த 2022 -2023 கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோல 2-வது ஆண்டாக, இந்த ஆண்டும் 2023 -2024 கல்வியாண்டில் தொகுதிவாரியாக முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் விழா இன்று நடைபெற உள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் நிகழ்வில், முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி. தூத்துக்குடி, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார்.
காலை 9 மணிக்கு தொடங்கும் விழாவில், நடிகர் விஜய் மாணவர்கள் மத்தியில் சிறிது நேரம் உரையாட உள்ளார். அதன்பிறகு வழக்கமான நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சி முடிந்தவுடன் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை நடிகராக பரிசுகள் வழங்கிய அவர், இம்முறை கட்சித் தலைவராக பரிசுகள் வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை நடிகராக மட்டுமே விஜய் இந்த கருத்துக்களை தெரிவித்து இருந்தால், இம்முறை விஜய் அரசியல் கட்சியின் தலைவராகவும் இருப்பதால், விஜய் எந்த மாதிரியான கருத்துக்களை பேச உள்ளார் என்பது குறித்து பொதுமக்களிடையே ஆர்வம் எழுந்துள்ளது.