Ragging: கொச்சியில் 14 வயது பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், தனது மகனை ராகிங் செய்து அடித்து துன்புறுத்தி தற்கொலை செய்ய தூண்டியதாக தாயார் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியின் திரிபுனிதாரா பகுதியில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி அடுக்குமாடி குடியிருப்பின் 26வது மாடியில் இருந்து குதித்து 15 வயதான மிஹிர் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலிசார் தற்கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில், மகனின் மரணத்தை தொடர்ந்து, மிஹிர் அகமதுவின் தாயார் ராஜ்னா பி.எம்., பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அதாவது, இன்ஸ்டா பக்கத்தில் இது தொடர்பாக பேசிய தாயார் ராஜ்னா, மிஹிர் ஏன் இவ்வளவு கடுமையான முடிவை எடுத்தார் என்பதைப் புரிந்துகொள்ள நானும் என் கணவரும் தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினோம் என்று தெரிவித்துள்ளார்.
அவரது நண்பர்கள், பள்ளித் தோழர்களுடனான உரையாடல்கள் மூலமாகவும், சமூக ஊடகச் செய்திகளைப் படிப்பதன் மூலமாகவும், அவர் அனுபவித்த கொடூரமான யதார்த்தத்தை நாங்கள் அறிந்து அதிர்ச்சியுற்றோம் என குறிப்பிட்டுள்ளார். மிஹிர் பள்ளியிலும் பள்ளி பேருந்திலும் ஒரு மாணவர் குழுவால் கொடூரமான ராகிங், கொடுமைப்படுத்துதல் மற்றும் உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். நாங்கள் சேகரித்த சான்றுகள் நெஞ்சை உறைய வைப்பதாக உள்ளது, மிஹிரை மிக மோசமாக தாக்கியுள்ளனர், இழிவான வார்த்தைகளால் திட்டியுள்ளனர், நினைத்துப் பார்க்க முடியாத அவமானத்தைத் மிஹிர் தாங்கிக்கொண்டிருந்துள்ளான்.
மிஹிரை அடித்து துன்புறுத்தி, இழிவான வார்த்தைகளால் திட்டி, கழிப்பறை இருக்கையை நாக்கால் நக்க கட்டாயப்படுத்தியுள்ளனர் என்று தாயார் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மகனின் மரணம் குறித்து உடனடி மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தக் கோரி முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்திற்கும் கேரள காவல்துறைத் தலைவருக்கும் கடிதம் எழுதியதாகக் கூறியுள்ளார்.