திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி, வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதிகளில் ரவுடியாக அறியப்பட்டவர் பரணிதரன். இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில் பரணிதரன் சமயபுரம் பகுதியில் உள்ள நந்தா நகரில் தனது மனைவி பிரதீபா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று காலை அவரது மனைவி பிரதீபா வேலைக்கு சென்ற பிறகு குழந்தைகளுடன் வீட்டில் இருந்திருக்கிறார் பரணிதரன். அப்போது காரில் வந்த மர்மகும்பல் வீட்டிற்குள் புகுந்து குழந்தைகளின் கண் முன்னே பரணிதரனை கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றிருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் இறந்த ரவுடி பரணிதரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையின் விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியது தெரிய வந்திருக்கிறது.
குழுமணி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ சக்தி என்ற சக்திவேல் மற்றும் பரணிதரன் இடையே முன்விரோதம் இருந்திருக்கிறது. இதன் காரணமாக சக்திவேல் தனது ஆதரவாளர்களுடன் வந்து பரணிதரனை கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.