தமிழகத்தில் நாளை முதல் வரும் இரண்டு முக்கிய மாற்றங்கள்.
மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது நாளை முதல் அமலுக்கு வருகிறது. எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை 10 உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி, 750 மி.லி கொள்ளளவுகளில் விறக்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி, 500 மி.லி கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2,500 ரூபாய் ஊதியம் உயர்வு:
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட (16,549) பல்வேறு சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருவது தெரிந்ததே. இவர்களின் தற்போது பணியில் இருப்பவர்கள் 10,359 ஆசிரியர்கள் ஆவார்கள். இவர்கள் அனைவரும் 5,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு தற்போது 10,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகின்றது.
இவர்களின் முந்தைய கோரிக்கையான ஓய்வு பெறும் வயதினை 60 ஆக்குவது மற்றும் அவர்களுக்கு விரும்பிய மாவட்டத்திற்கு மாறுதல் அளிப்பது என்பதை அரசு ஏற்று ஏற்கனவே நடைமுறைப்படுத்தி உள்ளது. தற்போது நிதி நெருக்கடி இருந்தாலும் இவ்வாசிரியர்களுக்கு மாத ஊதியத்தினை 12,500 ரூபாயாக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.