இன்ஸ்டாகிராம் மோகத்தால் 2 இளைஞர்கள் பைக் திருடிய சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அந்த இரண்டு இளைஞர்களும் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தைச் சார்ந்த சீனிவாசன் என்பவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தனது அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய பைக் திருடு போனதாக காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். மேலும் இது போன்ற பல பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து தொடர்ந்து பதிவானதால் கீழ்ப்பாக்கம் உதவிய ஆணையர் தனிப்படைகளை அமைத்து சம்பவம் தொடர்பாக தீவிரமான விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இது போன்ற பைக் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக திருடு போன பகுதிகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் அடிப்படையில் ஓட்டேரியைச் சேர்ந்த பாலமுருகன் மற்றும் சூளைமேட்டை சேர்ந்த சோமேஷ் ஆகிய இருவரும் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் பதிவு செய்து அதிக லைக்குகள் வாங்குவதற்கு பைக் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்ற அதிவேக பைக்குகளில் வேகமாகச் சென்று சாகசங்கள் புரிந்து அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றினால் இணையவாசிகளிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் இது போன்ற பைக்குகளை இவர்களிடமிருந்து வாங்கி பலரும் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக இவர்களிடம் இருந்து யார் யார் பைக் வாங்கி இருக்கிறார்கள்? என்ற பட்டியலையும் காவல்துறை தயார் செய்து வருகிறது. மேலும் இந்த பைக் திருட்டுச் சம்பவத்தில் இவர்களுக்கு வேறு யாரேனும் உதவி செய்திருக்கிறார்களா? என்ற ரீதியிலும் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.