தற்போது நடந்த ஒரு கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் அதிமுக மற்றும் பாஜக உடனான கூட்டணி முறிவை குறித்து சில பரபரப்பான கருத்துக்களை தெரிவித்துள்ளார். நீட் தேர்வு, வேளாண் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை பாஜக கொண்டு வந்த போது, அவற்றை ஆதரித்த அதிமுக இப்போது அவர்களை எதிரியாக கருதுவது நாடகமாக தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் நான்கரை ஆண்டுகளாக நீடித்து வந்த அதிமுக மற்றும் பாஜக உடைய கூட்டணி, கடந்த செப்டம்பர் 2023 இல் முடிவுக்கு வந்தது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே இருந்த கசப்பான தருணங்களாலும், கருத்தியல் வேறுபாடுகளாலும் இந்த முடிவை எடுத்ததாக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்த இரு பெரும் கட்சிகளின் பிரிவு பொது வெளியிலும் அரசியல் வெளியிலும் பலருக்கு சந்தேகத்தை கிளப்பியது. மீண்டும் இருவரும் கூட்டணியை அமைக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து சில சர்ச்சையான கருத்துக்களை முன்பே கூறியிருந்தார். அதிமுக, பாஜக உடனான கூட்டணியை முறித்து மக்களை குழப்ப முயற்சிப்பதாகவும், தேர்தல் நெருங்கும் சமயத்தில், இருவரும் இணைந்து வாக்கு கேட்க கூடும் என்றும் கூறியிருந்தார். இதில் ஒருவர் திருடன், மற்றொருவர் கொள்ளைக்காரன். இது மட்டும்தான் இரண்டு கட்சிக்கும் உள்ள வித்தியாசம் என்றும் கூறினார். இந்த இரு கட்சிகளுக்குமான கூட்டணி முறிவு, ஒரு அரசியல் நாடகம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது நடந்த ஒரு கூட்டத்தில் அவர் மீண்டும் சில சர்ச்சையான கருத்துக்களை கூறியிருக்கிறார். வேளாண் சட்டத்தையும், நீட் தேர்வு போன்றவற்றையும் பாஜக அரசு கொண்டு வந்தபோது, அவற்றை ஆதரித்தது அதிமுக தான் என்று குற்றம் சாட்டினார். அதிமுக எம்.பிக்கள் ஆதரித்த காரணத்தினால் தான் குடியுரிமை சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது என்றும் கூறிய அவர், இப்போது ஒரே நாளில் பாஜக தங்களுக்கு எதிரி என்று அதிமுக கூறுவது நாடகம் போல இருக்கிறது என்று சாடி இருக்கிறார்.