Donald Trump: கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு புதிதாக விதித்த இறக்குமதி வரியை ஒரு மாதத்திற்கு, இடைநிறுத்தம் செய்வதாக, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47வது அதிபராக, ஜன., 20ல் பதவியேற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அதிபர் டிரம்ப், ‘மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிக்கப்படும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, கூடுதலாக, 10 சதவீத வரி விதிக்கப்படும்’ என்றார். கூடுதல் வரி விதிப்பால் மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் கடும் அதிருப்தி அடைந்தன.
அமெரிக்க பொருட்களுக்கு, 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். அதேபோல் மெக்சிகோ நாடுகளும் அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என தெரிவித்தது. இந்நிலையில் வரி விலக்கு அளிக்க கோரி, டிரம்புக்கு கனடா பிரதமர், மெக்சிகோ அதிபர் தொலை பேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினர்.
இதன் பிறகு, கனடா, மெக்சிகோ நாடுகளுக்கு புதிதாக விதித்த இறக்குமதி வரியை ஒரு மாதத்திற்கு, இடைநிறுத்தம் செய்வதாக, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து சமூகவலைதளத்தில் டிரம்ப் வெளியிட்ட அறிக்கை: மெக்சிகோவின் அதிபர் கிளாடியா ஷீன்பாமுடன் நான் தொலைபேசியில் பேசினேன். இது மிகவும் நட்புரீதியான உரையாடலாக இருந்தது.
மெக்சிகோவுக்கு புதிதாக விதித்த இறக்குமதி வரியை ஒரு மாத காலத்திற்கு உடனடியாக இடைநிறுத்தவும் நான் ஒப்புக்கொண்டேன். பாதுகாப்பான வடக்கு எல்லையை உறுதி செய்வதற்கும், நமது நாட்டிற்குள் வந்து குவிந்து வரும் பென்டானில் போன்ற கொடிய போதைப்பொருட்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் கனடா ஒப்புக்கொண்டுள்ளது.
இவை லட்சக்கணக்கான அமெரிக்கர்களைக் கொன்று, நம் நாடு முழுவதும் அவர்களின் குடும்பங்களையும் சமூகங்களையும் அழித்து வருகின்றன. அதிபராக அனைத்து அமெரிக்கர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது எனது பொறுப்பு. நான் அதைத்தான் செய்கிறேன். இந்த ஆரம்ப முடிவில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். கனடாவுக்கு புதிதாக விதித்த இறக்குமதி வரி ஒரு மாதத்திற்கு, இடைநிறுத்தம் செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.