இந்தியாவின் பல பகுதிகளில் காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு முக்கிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.. இந்த காய்ச்சல் நோயாளிகளுக்கு, இரண்டு வாரங்களுக்கு நீடித்த இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.. இதனால் பல முக்கிய நகரங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழகின்றன.. இந்த காய்ச்சலுக்கு இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3N2 மாறுபாடு தான் காரணம் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.. கொரோனா போன்ற அறிகுறிகளுடன் பரவும் இந்த காய்ச்சல், 3 நாட்களில் குணமானாலும், இருமல், குமட்டல், வாந்தி போன்ற பிற அறிகுறிகள், தொண்டை புண் மற்றும் உடல் வலி முழுமையாக குணமடைய 3 வாரங்கள் வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது..
பொதுவாக மூன்று நாட்களுக்குள் காய்ச்சல் மறைந்துவிடும், ஆனால் இருமல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும். ஆனால் இந்த காய்ச்சல் குணமடைய மக்கள் அடிக்கடி ஆண்டி பயாடிக் மாத்திரைகளை உட்கொள்கின்றனர் என்பது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. எனவே மருத்துவர்கள், ஆண்டிபயாடிக் மருந்துகளை வழங்குவதைத் தவிர்த்து, சிகிச்சையை மட்டுமே வழங்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) அறிவுறுத்தியது.
இந்த இன்ப்ளூயென்ஸா வைரஸ் காரணமாக பெரும்பாலும் 15 வயதிற்குட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.. இந்த வைரஸ் காய்ச்சலுடன் மேல் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் அசித்ரோமைசின் (Azithromycin), அமோக்ஸிக்லாவ் (Amoxiclav), அமோக்ஸிசிலின் (Amoxicillin), நார்ஃப்ளோக்சசின் (Norfloxacin) போன்ற ஆண்டிபயாடிக் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
இந்நிலையில், காய்ச்சலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முக்கிய அறிவுறுத்தல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.. மேஎலும் மக்கள் பின்பற்ற வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்ன என்பது குறித்தும் மத்திய அரசு ஆலோசனை வழங்கி உள்ளது.. அதன்படி “ மக்கள் சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை தவறாமல் கழுவ வேண்டும்.. முகக்கவசம் அணிய வேண்டும்.. நெரிசலான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.. காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டால், பாராசிட்டமால் பயன்படுத்தலாம்.. மேலும் மற்றவர்களுடன் கைகுலுக்கக்கூடாது என்றும், சுயமாக மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. ஆண்டிபயாடிக் மற்றும் பிற மருந்துகளை மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே எடுக்க வேண்டும்..” என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது..