தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த, சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக இருந்து வந்த நவீன் பட்நாயக், தன் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த முதலமைச்சர் யார் என்று தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கிடைத்துள்ள தோல்வியை மனதார ஏற்றுக்கொள்கிறேன் என நேற்று முன்னாள் முதலமைச்சர் கூறி இருந்தார். மாநில மக்களுக்கு முடிந்தவரை சிறந்த சேவைகளை நாங்கள் வழங்கினோம். இருந்தும் தோல்வி அடைந்துள்ளோம். இந்த தோல்வியை அடுத்து, வி.கே.பாண்டியன் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் கட்சியில் சேர்ந்து எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. இந்த தேர்தலில் அவர் எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை என முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் கூறியிருந்தார்.
இந்தத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் மூளையாக செயல்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி.கே.பாண்டியன், தேர்தல் தோல்விக்குப் பிறகு பொதுவெளிக்கு வரவே இல்லை. இந்த நிலையில் வி.கே.பாண்டியன் வீடியோ பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார். அதில் , நவீன் பட்நாயகிற்கு உதவவே நான் அரசியலுக்கு வந்தேன். பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. இன்று வரை என் மூதாதையர்களின் சொத்துக்கள் தான் என் வசம் உள்ளது. நான் ஐஏஎஸ் சேரும்போது இருந்த சொத்துக்களே, இப்போதும் என்னிடம் உள்ளது என கூறியுள்ளார்.