வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாக்பூரில் இடைவிடாத கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது, 53 வயதான பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். அதிகாலை 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நகரத்தில் சுமார் 90 மிமீ மழை பதிவாகியுள்ளது. மாநிலத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10,000 ரூபாயும், வெள்ளத்தால் சேதம் அடைந்த பெரிய கடைகள் மற்றும் சிறிய சாலையோர நிறுவனங்களுக்கு 5 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுமார் 10,000 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் நகரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையை வழங்கியதால், அனைத்து அவசரகால மற்றும் மீட்புக் குழுக்களும், நிர்வாக அமைப்புகளும் மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாக்பூரில் மழை வெள்ளம் பாதித்த இடத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, எதிர்பாராத கனமழை பெய்துள்ளதாக கூறினார். நகரில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கு போன்ற பிரச்சனைகளை தீர்க்க நீண்ட கால நடவடிக்கைகளின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.