அதிமுக கூட்டணி வேண்டாம் என பாஜகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தபோது, அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் தான் கூட்டணியின் இணைவோம் என எடப்பாடி பழனிசாமி நிபந்தனை போட்டதாக கூறப்படுகிறது.
இதனால், டெல்லிக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வரவழைக்கப்பட்டார். பின்னர், மீண்டும் சென்னை திரும்பிய அண்ணாமலை, ”அமித்ஷாவிடம் பேசிய அனைத்தையும் நான் சொல்ல முடியாது. நான் ஒரு சாதாரண பாஜக தொண்டனாக கூட இருக்கிறேன் என்று கூட சொல்லிவிட்டேன். தமிழ்நாட்டின் நிலவரத்தை டெல்லி மேலிடத்திடம் தெரிவித்துவிட்டேன். இனி அவர்கள் முடிவு எடுப்பார்கள்” என்றார். இதனைத் தொடர்ந்தே அண்ணாமலை நீக்கப்படுவது உறுதி என தகவல்கள் பரவின.
இதையடுத்து, சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு புதிய தலைவரை தேர்வு செய்ய பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது. இதில், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், தமிழிசை ஆகியோர் பட்டியலில் உள்ளனர். மூன்றரை ஆண்டுகளுக்கு மேல் பாஜக மாநில தலைவர் பதவி வகித்துள்ளார் அண்ணாமலை. இந்நிலையில், புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வரும் 9ஆம் தேதி பாஜக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அண்ணாமலைக்கு மாற்று பதவி வழங்குவது குறித்தும் கட்சி மேலிடம் பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில், அதிமுக கூட்டணி வேண்டாம் என பாஜகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி வேண்டாம் என்றும் அண்ணாமலை மாநில தலைவராக தொடர வேண்டும் என்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பாஜக மாவட்ட செயலாளர் சரவணன் சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.