கொளத்தூர் தொகுதியில் மொத்தம் ரூ.70.69 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பெரியார் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக மூன்று வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கொளத்தூர், ஜமாலியா லேன் திட்டப்பகுதியில் 23 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 130 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். மேலும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 40 கோடியே 34 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 6 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பெரியார் அரசு மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக 40 இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மூன்று வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கொளத்தூரில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ஜமாலியா லேன் திட்டப்பகுதியில் 23 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 130 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, குடியிருப்புகளை பார்வையிட்டார். மேலும், பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளையும், அவர்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களையும் வழங்கினார்.
அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜமாலியா லேன் திட்டப்பகுதியில் பழுதடைந்த பழைய 128 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டது. முதலமைச்சர் அவர்களால் 11.6.2022 அன்று ஜமாலியா லேன் திட்டப்பகுதியில் புதிய குடியிருப்புகள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி,128 குடும்பங்களுக்கு கருணைத் தொகையாக தலா ரூ.24,000 வீதம் மொத்தம் ரூ.30.72 இலட்சம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்; 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும். மக்களுக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் செய்து வருகிறது என்றார்.
Read More: ஆண்டாள் பிறந்த பூமி.. பக்தியும் பாரம்பரியமும் நிறைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில்..!!