மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த முதியவருக்கு 4 மகள்கள் ஒரு மகன். முதியவரின் மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்திருக்கிறார். இதனால், ஆண் வாரிசு இல்லாத முதியவருக்கு தனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று நினைத்து, அதற்காக வேறு ஒரு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று மூத்த மகளிடம் கேட்டிருக்கிறார். வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக தனது 16 வயது மகளையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று தந்தையிடம் அவர் கூறியிருக்கிறார். இதற்கு அந்த முதியவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர் உறவினர்களிடம் பேசி ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளன. இதற்காக உறவினர் பலரிடம் பேசி சமாதானம் பெற்று வந்திருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் சொந்த தாத்தாவே தன்னை திருமணம் செய்து கொள்வதா என்று கவலையில் இருந்த சிறுமியிடம் ஆறுதலாக பேசிய சித்தப்பா, இதிலிருந்து உனக்கு நான் உதவி செய்கிறேன். இந்த திருமணத்தை நிறுத்துகிறேன் என்று சொல்லி அந்த சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். கடைசியாக தோட்டத்தில் சிறுமியுடன் சித்தப்பா இருந்த போது தாய் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அதற்கு உடனே ஒன்றரை லட்சம் பணம் தருகிறேன் உன் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுத்து விடு என்று சொல்ல, உங்களுக்கு ஆண் வாரிசு தானே வேண்டும் நானே பெற்று தருகிறேன் என்று சித்தப்பா சொல்லியிருக்கிறார். இதற்கு தாயும் அந்த தாத்தாவும் சம்மதித்திருக்கிறார்கள். இதையடுத்து, சிறுமியை சித்தப்பாவுடன் திருமணம் செய்து அனுப்பி வைத்துவிட்டு மகள் காணாமல் போய் விட்டதாக நாடகமாடியிருக்கிறார். போலீசிலும் அந்த பெண் அப்படியே புகார் அளித்திருக்கிறார். ஆனாலும் போலீஸ் விசாரணையில் உண்மை வெளியே வந்திருக்கிறது. இதை அடுத்து சிறுமியின் தாய், தாத்தா, சித்தப்பா அனைவரும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.