கள்ளக்குறிச்சியில் மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 49-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
கள்ளச்சாராயம் அருந்தியதில் 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 30 கவலைக்கிடமாக இருப்பதாகவும், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பலருக்கு வெண்டிலெட்டரில் சிக்கி அளிக்கப்பட்டுகிறது. ஐ.சி.யூ-வில் வைத்து 24 மணிநேரமும் கண்காணிப்பு நடந்து வருகிறது என்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்கள் தற்போது கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அ.தி.மு.க சட்டத்துறை செயலாளர் இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் டி.செல்வம் ஆகியோர் இந்த வழக்கை தொடர்ந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும், இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பி இருந்தனர். முடிவில் பேசிய நீதிபதிகள், “விஷச் சாராயம் விவகாரம் தொடர்பாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன. விஷச் சாராயம் தொடர்பாக தமிழகத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? விஷச்சாராய விற்பனையைத் தடுக்க கடந்த ஓராண்டில் காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன?” என்பன போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இறுதியில் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கை வரும் புதன் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.