தமிழக பாஜகவுக்கு 15-ம் தேதிக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக-வுக்கு புதிய மாநிலத் தலைவர் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேசிய தலைமை, மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நியமனம் செய்துள்ளது. கிஷன் ரெட்டி கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக பொறுப்பாளராக இருந்தார். புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே மண்டல தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், விரைவில் கிஷன் ரெட்டி தமிழகம் வர உள்ளார்.
தமிழகம் வரும் அவர், பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய இருக்கிறார். தற்போதைய தலைவர் அண்ணாமலை கடந்த 2021 ஜூலை 8-ம் தேதியில் இருந்து மாநில தலைவராக தொடர்ந்து வருகிறார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் அவர் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழக பாஜகவுக்கு 15ஆம் தேதிக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவில் ஒருவர் 2 முறை தலைவர் பதவி வகிக்கலாம் என்ற விதி உள்ளது. எனவே 90 சதவீதம் அண்ணாமலையே மீண்டும் தலைவராக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்களும், மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் அடுத்த பாஜக மாநில தலைவர் யார் என்கின்ற தகவல் உறுதியாகிவிடும்.