பாஜக தலைவர் அண்ணாமலை இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசி உள்ளார்..
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.. இதனிடையே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ பன்னீர்செல்வம் அணியும் தனித்தனியே பாஜகவிடம் ஆதரவு கோரியிருந்தனர்.. ஆனால் பாஜக தனது நிலைபாட்டை அறிவிக்காமல் உள்ளது..
மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. இதே போல் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.. இந்த சூழலில் நேற்று டெல்லி சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து பேசினார்.. அப்போது தமிழ்நாடு அரசியல் குறித்து அவருடன் பேசியதாக கூறப்படுகிறது..
டெல்லி பயணத்திற்கு பிறகு இன்று எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் அண்ணாமலை சந்தித்தார்.. அவருடன் கரு.நாகராஜன், சி.டி ரவி ஆகியோர் உடனிருந்தனர்.. இதை தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்தையும் அண்ணாமலை சந்தித்து பேசினார்.. இந்நிலையில் அதிமுக விவகாரத்தில் பழனிசாமி பன்னீர்செல்வம் இருவரையும் ஒருங்கிணைக்க பாஜக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.. ஒருங்கிணைந்து செயல்படுமாறு பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்திடம் அண்ணாமலை கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.. பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..