அனைத்து அரசியல் கட்சியினரையும் போலீசார் ஒரே விதமாக பார்க்க வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை கண்டித்து பாமக போராட்டம் நடத்த திட்டமிட்டது. ஜனவரி 2ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், போலீஸ் அனுமதி கோரி பாமக சார்பில் டிசம்பர் 30ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், போலீசார் அனுமதி மறுத்தனர். அதாவது, போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி பெற வேண்டுமானால் 5 நாட்களுக்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும் எனக்கூறி மறுத்தனர்.
இதற்கிடையே, சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்ததை கண்டித்து திமுகவினர் மறுநாளே போராட்டம் நடத்தினர். இதன் காரணமாகவே பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ”பாமக 5 நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்த மனு அளிக்கவில்லை என்ற போலீஸ் கமிஷனர், திமுகவுக்கு மட்டும் சில மணி நேரங்களில் அனுமதி வழங்கியுள்ளார். விதிகளை மீறிய போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சர், டிஜிபி உத்தரவிட வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் அனுமதி இல்லாமல் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பு தெரிவித்தது. இதையடுத்து பேசிய நீதிபதி, ”ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாகுபாடு காட்டாமல் அனைத்து கட்சியினரையும் போலீசார் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும். ஒரே மாதிரியான நடவடிக்கை இருக்க வேண்டும்.
ஒரு கட்சிக்கு மட்டும் ஒரே நாளில் அனுமதி கொடுப்பது, மற்ற கட்சிகளின் கோரிக்கையை கிடப்பில் போடுவது என்ற நிலைப்பாடு இருக்கக் கூடாது. போராட்டத்தில் இருப்பவர்களின் மனநிலை பற்றி தெரியாது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், காவல்துறை தான் பதில் சொல்ல வேண்டி வரும். போராட்டத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் பரிசீலிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். மேலும், பாமக வழக்கில் பதிலளிக்கும்படி, போலீசாருக்கு உத்தரவிட்டு, வழக்கை வரும் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Read More : பயணிகள் அதிர்ச்சி..!! ஆட்டோ கட்டணம் அதிரடி உயர்வு..!! இனி குறைந்தபட்சமே ரூ.50..!! பிப்.1 முதல் அமல்..!!