தென்காசி அருகே, காவல்துறையில் பணியாற்றும் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக கணவன் வீட்டு முன்பே போராட்டத்தில் குதித்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம், கல்லூரணி வ. உ. சி. நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி கிருஷ்ணவடிவு, இந்த தம்பதிகளின் மகள் குமுதா. சின்னதுரை மரணம் அடைந்த நிலையில், தாயின் பராமரிப்பில் குமுதா வளர்ந்து வந்தார். இந்த நிலையில். சென்ற ஆறு மாதங்களுக்கு முன்னர் குமுதாவுக்கும், அருகே இருந்த கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் என்ற காவலருக்கும் திருமணம் நடந்தது.
ஆனால், திருமணம் நடந்து 25 நாட்கள் மட்டுமே குமுதாவுடன் இருந்த கணவர் சுதர்ஷன், வேலைக்காக சென்னைக்கு திரும்பி விட்டார். அதன் பிறகு, குமுதாவிடம் அதிகமாக பேசவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், குமுதா போன் செய்த போது, தனியாக வீடு பார்த்து, அதன் பிறகு உன்னை இங்கே அழைத்து வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
ஆனால், வெகு நாட்களாக கணவர் தன்னுடன் பேசாததால், கணவரிடம் தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டு அது பற்றி கேட்டுள்ளார். அப்போது, சுதர்சன் எனக்கு உன்னை பிடிக்கவில்லை. நான் வேறொரு பெண்ணை காதலிக்கிறேன், அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்னை மறந்து விடு என்று தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ந்து போன குமுதா, தன்னுடைய தாயிடம் இது பற்றி தெரிவித்து, கதறி அழுதுள்ளார். பின்பு குமுதாவின் உறவினர்கள் சுதர்சன் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் சுதர்சன் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், குமுதா தன்னுடைய தாயுடன் தங்கி இருந்தார். பல மாதங்கள் ஆன பின்னரும், தன்னுடைய கணவர் தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்து வந்ததால், இது தொடர்பாக அவர் காவல் நிலையத்திலும் புகார் வழங்கினார். ஆனாலும், காவல்துறையினர் தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
பின்னர் தன்னுடைய கணவருடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவித்து, சுதர்சனின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற குமுதா, அங்கே அவர்களிடம் முறையிட்டுள்ளார். ஆனால், அவர்கள் இது பற்றி பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர், கணவரின் வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அவருடைய தாய் கிருஷ்ண வடிவும் போராட்டத்தில் இறங்கினார்.
ஆனால், கணவரின் வீட்டார், இவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டு, வீட்டை பூட்டி விட்டு, சென்னைக்கு கிளம்பி சென்று விட்டனர். ஆனாலும் பூட்டிய வீட்டின் முன்பு போராட்டம் நடத்தி இருக்கிறார் குமுதா. அதன் பிறகும் கணவரிடமிருந்து எந்தவிதமான தகவலும் மாறாததன் காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளான குமுதா, ஏமாற்றத்துடன் சொந்த வீட்டிற்கு திரும்பி விட்டார்.
அதன் பிறகு வருத்தத்துடன், இருந்து வந்த குமுதா, வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பற்றி அறிந்து கொண்ட உறவினர்கள், அவருடைய வீட்டிற்கு முன்பாக திரண்டு குமுதாவின் தற்கொலைக்கு காரணமாக இருந்த சுதர்சன் மீது, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு பாராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, குமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகிறார்கள். அதோடு, திருமணமான ஆறு மாதங்களுக்குள் குமுதா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, தென்காசி உதவி மாவட்ட ஆட்சியர் லாவண்யா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.