வீட்டை விற்பது தொடர்பான சண்டையில் மனைவியை கொன்று உடலை பாத்ரூமில் மறைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர் ரேனு ஷின்கா (61). இவர், தனது கணவருடன் நொய்டாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது கணவர் அஜய் நாத் இந்திய வருவாய் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில், இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவி என்று கூட பார்க்காமல் அஜய் நாத், மனைவி ரேனு சின்காவை கொலை செய்துள்ளார். கொலை செய்து மனைவியின் உடலை பாத்ரூமிலேயே மறைத்து வைத்திருக்கிறார்.
அப்போது, சம்பவத்தன்று மாலை ரேனுவின் சகோதரர் அவருக்கு வழக்கம் போல் போன் செய்துள்ளார். ஆனால், அவர் அழைப்பை எடுக்கவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த ரேனு சின்காவின் சகோதரர் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்து கதவை தட்டியிருக்கிறார். கதவை யாரும் திறக்காதால் சந்தேகமடைந்த அவர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, ரேனு சின்கா பாத்ரூமில் கொலை செய்யப்பட்டு ரத்து வெள்ளத்தில் கிடந்தார். பின்னர், ரேனுகாவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, வீட்டில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தியபோது அவரது கணவரை காணவில்லை. அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து வீடு முழுவதும் போலீசார் சோதனை செய்தபோது, வீட்டின் ஸ்டோர் ரூமில் மறைந்து இருந்துள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும், இவர்கள் வசித்து வந்த வீட்டை ரூ.4.5 கோடிக்கு விற்க முடிவு செய்தார் கணவர் அஜய் நாத். இதற்காக ரூ.55 லட்ச அட்வான்ஸ் பணமும் வாங்கி உள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி வீட்டை விற்கக் கூடாது என்று பலமுறை கூறியிருக்கிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மனைவி வீட்டை விற்க சம்மதம் தெரிவிக்காத ஆத்திரத்தில் கணவர் அஜய் நாத் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.