மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை, மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன்செல்லப்பா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், மதுரை கிழக்கு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தமிழரசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய ராஜன்செல்லப்பா….
தமிழகத்தில் இரண்டு வருட திமுக ஆட்சியில் இதுவரை ஒரு புதிய பேருந்துகள் கூட வாங்கவில்லை. கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசு கள்ளச்சாராயத்தால் இறந்த 25 பேருக்கும், தமிழக மக்களின் இரண்டரை கோடி ரூபாய் வரி பணத்தை தலா 10 லட்ச ரூபாய் என அறிவித்துள்ளது. ஆனால் அரசு பேருந்து மோதி உயிரிழப்பு, மின்சாரம் தாக்கி உயிரிழப்பு என்றால் 1 லட்சம் அல்லது இரண்டு லட்சம் மட்டுமே நிவாரணம் வழங்கப்படுகிறது. மதுரையில், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உலக தமிழ்ச் சங்கம் நூலக வெறிச்சோடி காணப்படும் நிலையில், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தி விட்டு 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் பிடிஆர் எதிர்பார்த்த சூழ்நிலை தமிழகத்தில் இல்லாததால் அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு நிரந்தரமாக இருப்பாரா அல்லது தற்காலிகமாக இருப்பாரா என்பது காலத்தின் கட்டாயம். பல கட்சிகள் மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாததால், அவர்களால் தமிழகத்தில் வளர முடியவில்லை.
தமிழகத்தில், 500 மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் அத்துறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நீடிப்பாரா என்று பார்ப்போம் என தெரிவித்தார்…