தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாதுளம் பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் 42 வயதான அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். தச்சு தொழிலாளரான இவருக்கு 38 வயதான கலைவாணி என்ற மனைவி உள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், இந்த தம்பதிக்கு 12 வயதான மாரிச்செல்வன் என்ற மகனும், 9 வயதான நேச மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர்.
ஆரம்பத்தில், திருப்புவனத்தில் உள்ள அய்யனார் பேக்கரியில் அன்பரசன் வேலை செய்து வந்துள்ளார். பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டு, கடந்த இரண்டு மாதங்களாக தச்சு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அன்பரசன் பேக்கரியில் வேலை செய்து கொண்டிருந்த போது, அவருக்கும் திருபுவனத்தை சேர்ந்த சத்யா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர்களின் பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இது குறித்து ஒரு கட்டத்தில், அன்பரசனின் மனைவி கலைவாணிக்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவன் – மனைவி இடையே, கடந்த சில மாதங்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல், இந்த சம்பவம் தொடர்பாக கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கலைவாணி, தனது கணவனின் தலையில் குலவிக்கல்லை போட்டுள்ளார்.
இதில், அன்பரசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் மேற்கு போலீசார் அன்பரசனின் சடலத்தை மீட்டு, கும்பகோணம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அன்பரசனின் மனைவி கலைவாணியை கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.