தெலங்கானா மாநிலம் வாரங்கல்லை சேர்ந்தவர் சுமந்த் ரெட்டி. டாக்டராக பணியாற்றி வரும் இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு ஃப்ளோரா மரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஃப்ளோரா மரியா செயிண்ட் அந்தோணி பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்துள்ளது.
இதையடுத்து, ஃப்ளோரா மரியா தன்னுடன் பணி புரியும் ஒருவர் கூறியதின் படி மருத்துவரிடம் சென்றுள்ளார். அப்போது மருத்துவர், தைராய்டு பிரச்சனையால் கருத்தரிக்க முடியவில்லை என்றும், உடற்பயிற்சி மையத்திற்குச் சென்று உடற்பயிற்சி செய்யும்படி கூறியுள்ளார். இதனால், ஃப்ளோரா மரியா சங்காரெட்டியில் உள்ள ஜிம் ஒன்றுக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த ஜிம்மில், சாமுவேல் என்பவர் மரியாவிற்கு பயிற்சி அளித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர், சுமந்த் ரெட்டி – மரியா தம்பதி வாரங்கலில் உள்ள ரங்கசாய்பேட்டைக்கு பணியிடம் மாற்றம் காரணமாக சென்றுள்ளனர். அங்கு சுமந்த் ரெட்டி, காஜிப்பேட்டையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
அங்கு மரியா, சாமுவேலுடன் தொலைபேசி மற்றும் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில், சுமந்த் வீட்டில் இல்லாத போது, சாமுவேல் ஃப்ளோராவின் வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளனர். இது குறித்து சுமந்த் ரெட்டிக்கு தெரிய வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுமந்த் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மரியா, எப்படியாவது சுமந்தை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
இதற்காக மரியா, சாமுவேலிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். இதையடுத்து, சாமுவேல், ஆயுதப்படையில் பணி புரியும் தனது நண்பரான ராஜ்குமாரிடம் இது குறித்து கூறியுள்ளார். மேலும், சுமந்தை கொலை செய்துவிட்டால், சொந்த ஊரில் வீடு கட்டித் தருவதாக கூறி, செலவுக்கு ரூ.50,000 கொடுத்துள்ளார். இதனால், ராஜ்குமார் டாக்டர் சுமந்த் ரெட்டியைக் கொலை செய்ய ஒப்புக்கொண்டார்.
அதன்படி, கடந்த 20 ஆம் தேதி, வழக்கம் போல் தனது பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய சுமந்த் காரை ராஜ்குமார், சாமுவேல் இருவரும் பின்தொடர்ந்துள்ளனர். பட்டுப்பள்ளியின் இருண்ட பகுதி ஒன்றுக்கு கார் சென்ற உடன், சாமுவேல் தன்னிடம் இருந்த சுத்தியலால் காரின் பின்புறம் உள்ள இண்டிகேட்டரை அடித்துள்ளார். இதனால் பதறிப்போன சுமந்த், காரை நிறுத்தி கீழே இறங்கியுள்ளார்.
அப்போது சாமுவேல், தன்னிடம் இருந்த சுத்தியலால் சுமந்தை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் சுமந்த், மயங்கி விழுந்துள்ளார். இதில் அவர் இறந்து விட்டதாக நினைத்த சாமுவேல், அங்கிருந்து சென்றுள்ளார். பலத்த காயங்களுடன் சுமந்த் சாலையில் கிடப்பதை பார்த்த பொது மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுமந்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு சுமந்த் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மரியா போட்ட பிளான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் கணவரை கொள்ள திட்டமிட்ட, ஃப்ளோரா மரியா, கள்ளக்காதலன் சாமுவேல், அவர்களுக்கு உதவிய ஏ.ஆர். கான்ஸ்டபிள் ராஜ்குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர்.