சென்னை, கீழ்பாக்கம் பகுதியில், 30 வயதான மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள துணிக் கடை ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் துணி எடுத்துக் கொண்டிருந்த போது, அங்கு வேலை செய்யும் நபர் ஒருவர், மீனாவிடம் அவதூறாக பேசியது மட்டும் இல்லாமல், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா, உடனடியாக இந்த சம்பவம் குறித்து எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மீனா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பிஎன்எஸ் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (TNPHW Act) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது, 34 வயதான அசோக் தாக்கூர் என்பது தெரியவந்துள்ளது. பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சீத்தாராம் தாக்கூரின் மகனான அசோக் தாக்கூர், சூளை ஹைரோடு பகுதியில் தற்போது வசித்து வருகிறார். இதையடுத்து, அசோக் தாக்கூரை கைது செய்த போலீசார், தீவிர விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Read more: “என் மனைவியோட கள்ளக்காதலனை மட்டும் சும்மா விடாதீங்க சார்” கதறி துடித்த கணவன் செய்த காரியம்..