கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர், 38 வயதான ராஜேஷ். ஓட்டுநராக வேலை செய்து வரும் இவருக்கு, 34 வயதான திவ்யஸ்ரீ என்ற மனைவி உள்ளார். திவ்யஸ்ரீ, சந்தேரா காவல் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு, 12 வயதான ஆஷிஷ் என்ற மகன் உள்ள நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், இருவரும் தனித் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், ராஜேஷ் நேற்று அவரது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வழக்கம் போல், கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி திவ்யாஸ்ரீயை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதை தடுக்க முயன்ற திவ்யாஸ்ரீ தந்தை வாசுவையும் ராஜேஷ் குத்தி விட்டு, தப்பி சென்றுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த தந்தை மற்றும் மகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், திவ்யாஸ்ரீ உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், அவரது தந்தை வாசுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Read more: “லிப் லாக் காட்சி இருந்தால், படத்தில் நடிக்க மாட்டேன்”; பிரபல நடிகையின் கொள்கையை புகழும் ரசிகர்கள்..