கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பின்புறம் சையத் பாஷா மலை உள்ளது. திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவர், 30 வயது உறவுக்கார பெண் ஒருவருடன் இந்த மலைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிற்பகல் 3 மணிக்கு சென்றுள்ளார். மலையின் மேற்பகுதிக்கு சென்ற போது, அங்கு 4 இளைஞர்கள் மதுபோதையில் இருந்துள்ளனர்.
அந்த கும்பல் திருப்பத்தூரை சேர்ந்த அந்த நபர் மற்றும் அவருடன் சென்ற பெண்ணை மிரட்டி அந்த பெண் அணிந்திருந்த தங்க சங்கிலி, கம்மல் உள்ளிட்டவைகளை பறித்துள்ளனர். மேலும், அந்த நபரிடம் இருந்த ரூ.7 ஆயிரத்தை பறித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல், அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.7 ஆயிரத்தை கூகுள் பே மூலம், தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொண்டனர்.
பின்னர், அந்த கும்பலை சேர்ந்த 4 பேரில் 2 பேர், அந்தப் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த காட்சியை மீதம் இருந்த 2 பேர் தங்களின் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பின்னர், அந்த ஆணும், பெண்ணும் மலையில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளனர். அப்போது அந்த பெண் மலையில் தனக்கு நடந்த கொடுமைகளை மலையடிவாரத்தில் இருந்த பொதுமக்களிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள டவரில் பதிவான செல்போன் எண்களை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பாதிக்கப்பட்டவர்கள் திருப்பத்தூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் இருந்து, கூகுள் பே மூலம் பணம் யாருடைய செல்போனுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்துள்ளனர். அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்த 21 வயதான கலையரசன் என்பவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது 20 வயதான அபிஷேக், கிருஷ்ணகிரியை சேர்ந்த 22 வயதான சுரேஷ், 21 வயதான நாராயணன் ஆகியோர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதில் சுரேஷ் மற்றும் நாராயணன் ஆகியோர் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து கலையரசன் மற்றும் அபிஷேக் ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் சுரேஷ் மற்றும் நாராயணனை தேடி வந்தனர். இதையடுத்து, பொன்மலை குட்டை பெருமாள் கோயில் பின்புறம் பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் கைது செய்ய முயற்சி செய்துள்ளனர்.
அங்கு போலீசார் வருவதை கண்ட சுரேஷ், நாராயணன் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த கத்தியால் போலீசார் பிரபாகர், குமார் ஆகியோரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையடுத்து, போலீசார் சுரேஷ் மற்றும் நாராயணனை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதில், சுரேஷ் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான். மேலும், நாராயணன் கீழே விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டது.
இந்நிலையில், காயம் அடைந்த போலீசார் குமார், விஜயகுமார் ஆகியோர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட சுரேஷ், கால் முறிந்த நாராயணன் ஆகியோரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.