தமிழ்நாட்டில் காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் டி.மகேஷ்குமார். இவர் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் காவலர், காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரளித்திருந்தார்.
இதன் காரணமாக மகேஷ்குமார் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், பாலியல் புகாரை அடுத்து மகேஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், பெண் டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் காவல்துறையினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி. முதல் ஐ.ஜி. வரையிலான காவல் அதிகாரிகள் அலுவலகம், முகாம் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது. காவல் அதிகாரிகள், அலுவலகம், முகாம் அலுவலகத்தில் பணியில் உள்ள பெண் போலீசாரை உடனே வேறு பணிக்கு மாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.