கணவருக்கு உண்மை தெரிய வந்ததால், கள்ளக்காதலனுடன் இருந்த தொடர்பை துண்டித்த இளம் பெண்ணை கொடூரமாக, கொலை செய்த கள்ளக்காதலனால், செங்கல்பட்டு அருகே பரபரப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ரயில் நகர் பகுதியை சேர்ந்த சுந்தர் (26) என்பவர், தாரணி(21) என்ற பெண்ணை காதலித்து, திருமணம் செய்தார். கூலி வேலை செய்து வரும் சுந்தரும், சிங்கப்பெருமாள் கோவில்நகர் ரோசாபுரம் பகுதியைச் சேர்ந்த சுதீன் என்ற இளைஞரும் சில வருடங்களாக நண்பர்களாக பழகி வந்தனர். அதோடு, அடிக்கடி இருவரும் மது அருந்துவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.
சுந்தர் உடனான பழக்கத்தின் காரணமாக, அவ்வபோது அவருடைய வீட்டிற்கு வந்து செல்வதை சுதின் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது சுந்தரின் மனைவி தாரணியுடன், சுதீனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, தாரணியும், சுதீனும் அவ்வப்போது தனிமையில், உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த நிலையில், தாரணியின் கணவர் சுந்தருக்கு தன்னுடைய மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தெரிய வந்ததால், இருவரையும் அவர் கண்டித்து இருக்கிறார். பின்னர் சுதீனுடன் பேசுவதை தாரணி நிறுத்திக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரம் கொண்ட சுதீன், தன்னிடம் ஏன் பேசுவதில்லை? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இந்த வாக்குவாதம் அதிகரித்த நிலையில், ஒரு கட்டத்தில், தான் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு, தாரணியின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி இருக்கிறார் சுதீன். இதனால், தாரணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு சென்ற சுதீன், கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்து, சரணடைந்திருக்கிறார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், சுதீனை கைது செய்து அவரிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். அதோடு, தாரணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.