புற்றுநோய் என்ற வார்த்தையே பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நிலையில், அதன் சிகிச்சையாக பயன்படுத்தப்படும் கீமோதெரபி கூட முடி உதிர்தல், வாந்தி, உடல் பலவீனம் போன்ற கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த சூழலில் மருத்துவ உலகில் புதிய நம்பிக்கையாக உருவெடுத்துள்ளது ‘கிரையோஅப்லேஷன்’ அல்லது ‘கிரையோதெரபி’ சிகிச்சை முறை.
இதில் புற்றுநோய் கட்டிக்குள் மெல்லிய ஊசி போன்ற கருவி செலுத்தப்பட்டு, அதன் மூலம் -140°C முதல் -190°C வரை கடும் குளிர் உருவாக்கப்படுகிறது. இந்த அதீத குளிரால் கட்டி செல்கள் பனியாக உறைந்து, அவற்றின் அமைப்பு உடைந்து அழிக்கப்படுகின்றன. பின்னர் மீண்டும் உருக்கி, இரண்டாவது முறையும் இதே செயல்முறை மேற்கொள்ளப்பட்டு புற்றுநோய் செல்கள் முழுமையாக அழிக்கப்படுகின்றன.
இந்த சிகிச்சையின் முக்கிய பலமாக பெரிய அறுவை சிகிச்சை தேவையில்லாதது, குறைந்த வலி, விரைவான மீட்பு மற்றும் கீமோதெரபி போன்ற கடுமையான பக்கவிளைவுகள் இல்லாதது குறிப்பிடப்படுகிறது. மேலும் இது மீண்டும் பயன்படுத்தக்கூடிய சிகிச்சை என்பதால் கட்டி மீண்டும் தோன்றினாலும் பயன்படுத்த முடியும்.
இந்தியாவில் தற்போது டாடா மெமோரியல், எய்ம்ஸ், அப்பல்லோ, ஃபோர்டிஸ் போன்ற முன்னணி மருத்துவமனைகளில் இந்த முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற ஆரம்ப கட்ட நோய்களுக்கு இது பயனுள்ளதாக கருதப்படுகிறது. எனினும், இந்த சிகிச்சை எல்லா வகை புற்றுநோய்களுக்கும் பொருந்தாது. பெரிய கட்டிகள் அல்லது இரத்தப் புற்றுநோய் போன்ற நிலைகளில் இது பயனளிக்காது என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதற்கிடையில், கிரையோஅப்லேஷன் மூலம் அழிக்கப்படும் புற்றுநோய் செல்கள் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பை தூண்டும் தன்மை கொண்டதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதனால் எதிர்காலத்தில் இந்த சிகிச்சை மற்ற மருத்துவ முறைகளுடன் இணைந்து புற்றுநோய் சிகிச்சையில் முக்கியமான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.



