திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகே 87 வயதாகும் அய்யம்மாள் என்பவர் தனியாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 4 மணிக்கு வழக்கம்போல் அய்யம்மாள் கடையை திறந்துள்ளார். அப்போது ஒரு பெண் மற்றும் பிளஸ் 2 மாணவன் இருவரும் கடைக்கு வந்ததிருக்கிறார்கள்.
அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அந்த இளம் பெண்ணும், சிறுவனும் சேர்ந்து, அய்யம்மாளின் கண்களில் மிளகாய் பொடியை தூவி கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். மிகுந்த கண் எரிச்சலில் அவதிபட்ட மூதாட்டி கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
உடனடியாக திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததை அப்படியே கூறி புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது, ஒரு சிறுவனும், ஒரு பெண்ணும் அப்பகுதியில் நடமாடியது தெரியவந்தது. இதையடுத்து 12-ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தார்கள்.
போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (33) என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ராஜேஸ்வரியை பிடித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் ராஜேஸ்வரி மற்றும் திருட்டுக்கு உடந்தையாக இருந்த பிளஸ்-2 மாணவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
தொடர்ந்து 2 பேரும் வேடச்சந்தூர் கோர்ட்டில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து வேடசந்தூர் நீதிபதி உத்தரவின்பேரில், ராஜேஸ்வரி நிலக்கோட்டை மகளிர் சிறையிலும், சிறுவன் திண்டுக்கல் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். இநத் சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.