ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக ரீதியிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத வர்த்தக தள்ளுபடி விகிதக் கட்டணம் (MDR) விதிக்கும் மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனினும், இது தொடர்பாக விரிவான விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த செப்டம்பர் 14 மற்றும் 15-ஆகிய தேதிகளில் வெளியிட்ட அறிவிப்பாணையின்படி, அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கும் அதிகமான வணிக ரீதியிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்பட உள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் அஞ்சன் தத்தா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.
தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் கருப்புப் பணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போதைய கூடுதல் கட்டண விதிப்பு டிஜிட்டல் முறையைப் பயன்படுத்துவோரை சோர்வடையச் செய்யும் என்று வாதிட்டார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் என். வேங்கடராமன், இந்த புதிய நடைமுறையால் 96 சதவீத யுபிஐ பயனர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டண வரம்பு அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே என்றும் தெரிவித்தார். மேலும், இது வரியோ அல்லது கட்டணமோ அல்ல, வங்கி மற்றும் தொழில்துறை சார்ந்த ஒரு தீர்வு முறை (industry settlement mechanism) என்றும் விளக்கமளித்தார்.
விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதி ஜோய்மால்யா பாக்சி, 140 கோடி மக்களைப் பாதிக்கும் இத்தகைய நடவடிக்கையின் சட்டபூர்வ தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான அனைத்துத் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் தகவல்களை விரிவான பிரமாணப் பத்திரமாகத் (Affidavit) தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.



