தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஜோசப் விஜய் முதன்முறையாக டெல்லி பயணம் செய்துள்ளார்.. தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து இன்று காலை 10 மணியளவில் புறப்பட்ட முதல்வர் விஜய் இன்று மதியம் டெல்லி சென்றடைந்தார்..
டெல்லி விமான நிலையத்தில் முதல்வர் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.. முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு சென்ற முதல்வர் விஜய்க்கு காவல்துறை சார்பில் அரசு மரியாதை வழங்கப்பட்டது.. அந்த மரியாதையை விஜய் ஏற்றுக்கொண்டார்..
இந்த நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை விஜய் சந்தித்தார்.. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் மோடி – விஜய் சந்திப்பு நடைபெற்றது.. முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடி உடன் நடைபெற இருக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.. அப்போது தேர்தலில் பெற்ற வெற்றிக்காக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்..
இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு, மேகதாது அணை விவகாரம், பி.எம்.ஸ்ரீ திட்டம், வளர்ச்சி திட்ட பணி ஒப்புதல், நிதி உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்த விரிவான மனுவை முதல்வர் விஜய் பிரதமரிடம் வழங்கினார்.. நீட் தேர்வு ரத்து, தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்தும் முதல்வர் விஜய் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.. மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் பிரதமரிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.. பிரதமர் மோடி – முதல்வர் விஜய் சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது..
இதை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாரமன் ஆகியோரையும் முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார்..
இன்றிரவு டெல்லியில் தங்கும் முதல்வர் விஜய் நாளை காலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோரை சந்திக்க உள்ளார்.. அதன்பின்னர் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.. இந்த சந்திப்பு முடிந்ததும் நாளை முதல்வர் விஜய் சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது..
Read More : கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்..!முதல்வர் சித்தராமையா நாளை ராஜினாமா..?



