கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை உடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.. ஆட்சி அமையும் போது முதலமைச்சர் யார் என்பதில் சித்தராமையா, டி.கே சிவகுமாருக்கு கடும் போட்டி நிலவியது.. இதனையடுத்து கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வார்கள் என்று காங்கிரஸ் மேலிடத்தால் 2023-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின..
இதையடுத்து கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி வகித்து வருகின்றனர்.. எனினும் 2.5 ஆண்டுகள் ஆன பிறகு, டி.கே.சிவகுமார் முதல்வராக வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வந்தனர்.. இது காங்கிரஸ் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது..
இந்த நிலையில் கர்நாடக அரசியல் தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தியது.. காங்கிரஸ் தலைமை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நாளை தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அவர் தனது ராஜினாமாவை முறைப்படி சமர்ப்பிப்பதற்காக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டைச் சந்திக்க நேரம் கோரியுள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கும் கர்நாடக முதலமைச்சருக்கும் இடையே டெல்லியில் நடந்த முக்கிய சந்திப்புக்கு பிறகு இந்த தகவல் வெளியாகி உள்ளது.. கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபாலிடம் தனது இறுதி முடிவைத் தெரிவிக்குமாறு சித்தராமையாவை காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக, சித்தராமையாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, நாடாளுமன்றத்தின் மேலவையில் நுழைவது குறித்து சித்தராமையா பரிசீலிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகின.
இருப்பினும், தேசிய அரசியலில் நுழையும் திட்டம் தனக்கு இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் கட்சித் தலைமையிடம் கூறியதாக நம்பப்படுகிறது. இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பு, இந்த முன்மொழிவு குறித்து சிந்திக்க கூடுதல் அவகாசம் கோரியதாகவும் கூறப்படுகிறது.
ஜூன் 8 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வியாழக்கிழமை ராஜினாமா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் கட்சி 6 மணி நேரம் நீண்ட கூட்டம் நடத்தியதை அடுத்து, செவ்வாயன்று கர்நாடகாவில் அரசியல் நிகழ்வுகள் தீவிரமடைந்தன. கர்நாடகாவில் வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தல்கள் குறித்து மட்டுமே விவாதங்கள் நடைபெற்றதாக அக்கட்சி தெரிவித்தபோதிலும், மாநில அரசு தொடர்பான ஆலோசனைகளே முக்கியத்துவம் பெற்றன.. சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின் டி.கே. சிவகுமார் புதிய முதல்வராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Read More : நாட்டு மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. வெப்ப அலை வீசி வரும் நிலையில் பிரதமர் மோடி அட்வைஸ்..!



