அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் தொழிற்சாலைகள், பணியாளர்களை காக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்:
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கை, தமிழகத்தின், குறிப்பாக பின்னலாடை மையமான திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் பாதிப்படைந்துள்ளது. இந்த சூழலில், மத்திய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறேன். உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் நமது தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமெரிக்காவின் வரிவிதிப்பால், ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல், நகைகள்ரத்தினக்கற்கள், தோல், காலணிகள், கடல்பொருட்கள், ரசாயனங்கள் துறைகளில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடி நிவாரணம் வழங்கி, பணப் புழக்கத்தை மேம்படுத்தவும், செலவுச் சுமைகளைக் குறைக்கவும் சுங்க வரிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் சிறப்பு வட்டி மானியத் திட்டம் அறிமுகம், அதிக சுங்க வரி சந்தை அபாயங்களை ஈடுகட்ட, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAக்கள்) மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்