தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் ஆன நிலையில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான ‘கோ-ஆப்டெக்ஸ்’ (Co-optex) நிறுவனத்தின் 10 விற்பனை நிலையங்களை இம்மாத இறுதிக்குள் நிரந்தரமாக மூடுவதற்கு தமிழ்நாடு அரசின் கைத்தறித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 90 ஆண்டுகாலப் பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் 146-க்கும் மேற்பட்ட கிளைகள் மூலம் நெசவாளர்களின் கைத்தறி தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. இந்நிலையில், குறிப்பிட்ட சில பகுதிகளில் போதிய விற்பனையின்றி தொடர் வணிக இழப்பு ஏற்பட்டு வந்ததால், நிர்வாக செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆந்திராவில் 5, தமிழகத்தில் 4 மற்றும் கோவாவில் 1 என மொத்தம் 10 விற்பனை நிலையங்களை மூட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு பயிர்க்கடன் தள்ளுபடி, 717 டாஸ்மாக் கடைகள் மூடல், மகளிருக்கான ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை ஆளுங்கட்சி முன்னெடுத்து வருகிறது. அதேநேரத்தில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்களைச் சீரமைக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு சார்ந்த விற்பனை மையங்களை ஆய்வு செய்து வரும் சூழலில், இந்த 10 கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : மக்களை தூங்கவிடாத டவுசர் கேங்..!! நள்ளிரவில் திக் திக்..!! வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!



