அறுவடை செய்யப்பட்ட நெல் தொடர்மழையால் கூடுதலான ஈரப்பதம் இருப்பது தவிர்க்க முடியாதது. இதை உணர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் பருவ மழையின் விளைவாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்கள் பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு அரசு நிர்வாக ரீதியாக பலவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், விவசாயிகள் கைமுதலை இழந்து பெரும் நட்டத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை நெற்பயிர் அறுவடை செய்ய முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மேலும், சம்பா நடவு செய்யப்பட வேண்டிய நிலத்திலும் நீர் தேங்கி இருக்கிற காரணத்தினால் சம்பா நடவும் பாதிப்பை சந்திக்கக்கூடிய நிலையில் இருக்கிறது..
மேலும், சில மாவட்டங்களில் கம்பு, மரவள்ளி, மணிலா, மக்காசோளம், பூச்செடிகள் உள்ளிட்ட பயிர்கள் பாதிகப்பட்டுள்ளன. மிகக் கடுமையான பாதிப்பை விவசாயிகள் சந்தித்துள்ள இத்தருணத்தில், தமிழ்நாடு அரசு பயிர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்திட உத்தரவிடுவதுடன் பாதிப்புகளுக்கு ஏற்ப அரசு இழப்பீடு வழங்கும் என்ற நம்பிக்கை விவசாயிகளுக்கு ஏற்படும் வகையில் அரசின் அணுகுமுறை இருப்பது அவசியம்..
இந்த ஆண்டு குறுவை சாகுபடி கூடுதலான பரப்பளவில் நடைபெற்றுள்ளது. தொடர் மழையினால் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகாமல் பாதுகாப்பாக வைப்பதற்குரிய மாற்று ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் , என வலியுறுத்தி உள்ளார்



