தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.. இதனால் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்தன.. இதில் காங்கிரஸ் கட்சிக்கு முதலில் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது.. பின்னர் விஜய்யின் கோரிக்கையை ஏற்று விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளும் அமைச்சரவையில் இணைய சம்மதம் தெரிவித்தன..
அதன்படி தவெக அமைச்சரவையில் விசிகவின் வன்னியரசும், ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜகானும் அமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.. வன்னிஅரசுக்கு சமூக நீதித்துறையும், ஷாஜகானுக்கு சிறுபான்மையின நலத்துறையும் ஒதுக்கப்படுள்ளது..
முதலில் தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும், திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் கூறிவந்த விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் தற்போது அமைச்சரவையில் இணைந்துள்ளது.. இதையடுத்து திமுக தரப்பு விசிகவை கடுமையாக விமர்சித்தது. திமுக எம்.பி. ஆ.ராசா, விசிக, ஐயூஎம்எல் கட்சிகளை மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார்..
தனது எக்ஸ் பக்கத்தில் “ “முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம்! வெற்றி நமக்கே!!” என்று பதிவிட்டிருந்தார்..
அவரின் இந்த பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அதனை நீக்கிய ஆ.ராசா மற்றொரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் ”முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்!” என்று குறிப்பிட்டுருந்தார்.. அவரின் இந்த கருத்துக்கு விசிகவும் பதிலடி கொடுத்து வருகின்றனர்..
இந்த நிலையில் திமுகவினர் யாரையும் புண்படுத்தும் படி கடுஞ்சொற்களை பேச வேண்டாம் என்று அக்கட்சி தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு.வன்னிஅரசு அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்! தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு.
எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள். பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : Breaking : முதல்வர் விஜய் விரைவில் டெல்லி பயணம்..! என்ன காரணம்..?



