அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டோர்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” எழுச்சிப் பயணத்தில் வந்தவாசியில் பேசிய அவர், ஸ்டாலின் பாட்டுக்கு கடன் வாங்கி வைத்துவிட்டுப் போய்விடுவார், நாளை ஆட்சிக்கு வருபவர்கள் கடும் துன்பத்துக்கு ஆளாக வேண்டும். நாளை அதிமுக ஆட்சி வந்தால் நம்மளைத்தான் சொல்வாங்க. கடன் திருப்பி கட்டலைன்னா விடுவாங்களா? திருப்பிச் செலுத்தலைனா பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.வரிகள் எல்லாம் உயர்த்திவிட்டனர். மின் கட்டணத்தையும் 67% உயர்த்திவிட்டனர்.
விவசாயிகளுக்கு நிறைய திட்டங்கள் கொடுத்தோம். பயிர்க்கடன் இரண்டுமுறை தள்ளுபடி, மும்முனை மின்சாரம், பயிர்க்காப்பீடு திட்டம் இழப்பீடு, குடிமராமத்து திட்டம், தடுப்பணைகள் என பல திட்டங்கள் கொடுத்தது அதிமுக அரசு. அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டோர்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.
திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை, அதனால்தான் வீடுவீடாகப் போய் உறுப்பினராகச் சேருங்கள் என்று பிச்சை எடுக்கிறார்கள். வெட்கமாக இல்லையா..? இந்தியாவில், தமிழ்நாட்டில் எங்காவது இப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்டா..? ஸ்டாலின் காண்பது பகல் கனவு, அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியாக அமையும். அதிமுக பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்.
“திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளை நம்பிக்கொண்டிருக்கிறார். பலமான கூட்டணி என கனவு காண்கிறார். ஆனால் அதிமுக மக்களை நம்பி இருக்கிறது. மக்கள் நினைத்தால்தான் யாரும் ஆட்சிக்கு வர முடியும். ஸ்டாலின் பல கட்சிகளை இணைத்துக்கொண்டு எந்த திட்டமும் கொடுக்காமல், ஊழல் அரசை நடத்துகிறார். அதிமுகவின் 10 ஆண்டுகளில் விலைவாசி உயரவே இல்லை. நான் முதல்வராக இருந்த நேரத்தில் வறட்சி, கரோனா, புயல் ஏற்பட்டபோதும் விலைவாசி உயரவில்லை. நிர்வாகத்திறமை மிக்க அரசு அதிமுக என்பதை நிரூபித்தோம். திமுக ஆட்சியில் அப்படி எந்த நிலையும் இல்லை ஆனால் விலைவாசி உயர்ந்துவிட்டது. மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது.
இவற்றைக் குறைக்க திமுக அரசு எதுவுமே செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் விலை கட்டுப்பாட்டுக்கு நிதி ஒதுக்கினோம், வேறு மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு பொருட்களை வரவழைத்துக் கொடுத்தோம். இங்கு பொம்மை முதல்வர் ஆள்வதால் மக்கள் படும் துன்பம் தெரியவில்லை. தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துவிட்டது. இனி எல்லோரும் கனவில் தான் வீடுகட்ட முடியும்.
எல்லாவற்றிலும் திமுகவுக்கு கமிஷன் கிடைக்கிறது. அதனால் விலை உயர்வு பற்றி திமுக அரசு கவலைப்படவில்லை. கொரோனா காலத்தில் ஒரு வருடம் ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம். மூன்று நேரம் உணவு கொடுத்தோம். எந்த ஒரு பிரச்னையும் இல்லாமலே திமுக ஆட்சியில் கடன் வாங்குகிறார்கள். நிபுணர் குழு அமைத்ததால், கடன் தான் அதிகமாகிவிட்டது. 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன். 73 வருட தமிழக ஆட்சி வரலாற்றின் கடனை விட திமுக அரசின் கடன் அதிகம்.