கடலூர் சிப்காட் பாதிப்பு… தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்…! ராமதாஸ் கோரிக்கை…!

ramadoss pmk

கடலூர் சிப்காட் பாதிப்புகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் சிப்காட் வளாகத்தில் உள்ள கிரிம்சன் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் கடந்த 5-ஆம் தேதி நடந்த விபத்தில், பயங்கர சத்தத்துடன் நச்சுப் புகை வெளியேறி அருகில் இருந்த குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த 90 பேர் மூச்சுத் திணறல், கண் எரிச்சல், மயக்கம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே தொழிற்சாலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு பாய்லர் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்களுக்கு நடுவில் உள்ள கடலூர் சிப்காட் தொடங்கியதிலிருந்தே அடிக்கடி விபத்துக்கள் நடப்பதும், நச்சு வாயுக்கள் வெளியேறுவதுமாக அருகாமையில் உள்ள பச்சையாங்குப்பம், சங்கொலிக்குப்பம், குடிகாடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. விபத்துக்கள் மட்டுமல்லாது அவ்வப்போது நெருப்புக் கனல் போல, பெரும் புகை மண்டலம் எழும்புவதை பார்க்கும் மக்கள் தினமும் அச்சத்துடனே வாழ்கின்றனர். மேலும் தொழிற்சாலை கழிவுகள் ஆற்றிலும், நீரோடைகளிலும் கலப்பதால் நிலத்தடி நீரும், விவசாயமும், மீன் வளமும் பாதிக்கப்பட்டுள்ளது.

நல்ல சாகுபடி மூலம் வருவாய் ஈட்டி வந்த விவசாயிகள் தற்போது தொழிற்சாலைகளுக்கு வெறும் 150, 200 ரூபாய்க்கு செக்யூரிட்டி வேலைக்கு செல்கின்றனர். கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த 4 உயிரிழப்புக்கு பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயம் இங்கு கூட்டுக்குழு அமைத்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றது. ஆனால் அந்த கூட்டுக்குழுவின் ஆய்வு முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனிடையே 2021-ல் நடந்த 4 உயிர்ப்பலிகளுக்குப் பிறகும், 2023, 2024 ஆண்டுகள் மற்றும் நடப்பு 2025-ல் மார்ச், ஆகஸ்ட் மாதங்களில் கூட விபத்துக்கள் நிகழ்ந்து உயிரிழப்புகளும், உடல் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

பெரிய அசம்பாவிதங்கள் நடைபெறும் போது மட்டும் தொழிற்சாலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார அமைப்புகள் வேலை செய்வது போல் தீவிரம் காட்டுகின்றன. ஆனால் மற்ற காலங்களில் நடைபெறும் சிறு விபத்துக்கள், பாதிப்புகள், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை.மேலும் இதுபோன்ற விபத்துகளின் போது தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் அபாயகரமான ரசாயனங்கள் குறித்து கடலூர், சிதம்பரம், புதுச்சேரியில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்கு கூட தெரிவிப்பதில்லை. இதனால் மாற்று மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக பெற முடியாமல் உயிர்களுக்கு ஆபத்து நேர்கிறது.

எனவே, நச்சு வாயுக்கள் வெளியேறுவது, விபத்துக்கள் நடப்பது போன்ற சமயங்களில் அருகில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தும் விதமாக, விபத்துக்கு தகுந்த மாதிரி அபாய சங்குகள் மாறி மாறி ஒலிக்கப்பட வேண்டும். பாதிப்புகளை தடுக்க தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், பொதுமக்கள் என 3 அடுக்கு பாதுகாப்பு முறைகளை ஏற்படுத்த வேண்டும். தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்கப்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகள், நோய்ப் பரவல்கள், நோய்களின் தன்மைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும். மேலும் எந்தெந்த தொழிற்சாலைகள் எந்தெந்த விதமான வேதிப்பொருட்களை, வாயுக்களை, கழிவுகளை வெளியேற்றுகின்றன. அவைகள் முறையாக சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றனவா? என்பவற்றை கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

அடிதூள்.. ஜனவரி முதல் ரூ.2000 மகளிர் உரிமை தொகை..? திமுக அரசின் தேர்தல் மூவ்..!!

Thu Sep 11 , 2025
It has been reported that the Tamil Nadu government is planning to increase the women's stipend to Rs 2,000.
Magalir Urimai Thogai 4 2024 06 13959d94ae85e2aed3566ce5d26fd069 1

You May Like