கரூரில் நடந்த மரணம்… அரசியல் ஆதாயம் தேடும் பாஜக…! இந்திய கம்யூனிஸ்ட் பரபரப்பு குற்றச்சாட்டு..!

amit shah vijay 2025

கரூர் மரணங்களை மையப்படுத்தி பாஜக நடத்தும் மலிவான அரசியலை செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம்சாட்டி உள்ளார்.


இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரை நிகழ்வில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததும், 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுமான துயரச் சம்பவம் நெஞ்சை விட்டு அகலாமல் வேதனைப்படுத்தி வருகிறது. அக்கட்சியின் தலைவரும், நிர்வாகிகளும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல், காவல் துறையின் பொதுவான கட்டுப் பாடுகளையும் மதிக்காமல் நடந்து கொண்டதே பேரபாய விளைவுக்கு காரணமாகி விட்டது.

அந்த துயரச் செய்தி, தமிழக முதல்வருக்கு எட்டிய ஆரம்ப நிலையில் இருந்தே அவரும், அரசும் போர்க்கால வேகத்தில் செயல்பட்டதின் காரணமாக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, பெரும் எண்ணிக்கையில் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். முதல்வரும், அமைச்சர்களும், உயர் அலுவலர்களும், இரவோடு இரவாக சம்பவ இடத்துக்கு சென்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களையும், உயிர் பலி கொடுத்து கதறி அழுதபடி நின்றிருந்த குடும்பங்களுக்கும் ஆறுதல் கூறி, ஆற்றுப்படுத்தியது நாடு முழுவதும் வரவேற்கப்படுகிறது.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பரிசோதனைப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சேவை மகத்தானது. இந்த உண்மை நிலைகளை மறைத்தும், மறுத்தும் வன்மம் வழியும் வஞ்சக நெஞ்சு கொண்டோர் சமூக ஊடகங்களில் அரசுக்கும், ஆளும் கட்சிக்கும் எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். இந்த விஷமத்தனத்தின் பின்னணியில் உள்ள அரசியல் சக்திகளை தமிழக மக்கள் நன்கறிவார்கள். அவைகளை வரும் காலத்தில் முற்றாக துடைத்தெறிந்து பாடம் புகட்டுவார்கள் என்பதில் எள் நுனியும் சந்தேகமில்லை.

ஆனால், அரசியல் களத்துக்கு புதிதாக வந்துள்ள கட்சியை சுற்றி வளைக்கும் அரசியல் சதிவலையை பாஜக விரித்திருக்கிறது. கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் மாநில அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ள நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அமைத்திருப்பதும், அந்தக் குழு உறுப்பினர் ஒருவர் வெளியிட்டுள்ள கருத்தும் ஆழ்ந்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

கொள்கை எதிரியாக பாஜகவை அடையாளப்படுத்துவது நெஞ்சறிந்த உண்மையா, பூசிக் கழுவும் அரிதாராப் பூச்சா என்ற வினாக்களும் எழுகின்றன. பேரிடர் துயரங்களில் ஏற்படும் மரணங்களை மையமாக வைத்து ஆதாயம் தேடும் மலிவான அரசியலை தமிழ்நாட்டு மக்கள் முறியடிப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

தமிழகத்தில் மற்றொரு சோகம்.. 9 பேர் மரணம்...! பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்...!

Wed Oct 1 , 2025
எண்ணூர் அனல் மின நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. திருவள்ளூர் மாவட்டம், வாயலூரில் 2×660 MW மெகா வாட் திறனுடைய எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்டுமானப் பணிகள் சமீப காலமாக நடைபெற்று வருகிறது. பாரதமிகு நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் இந்தக் கட்டுமான பணியில் 3,000-க்கும் மேற்பட்ட […]
PM Modi 2025 2

You May Like