திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு குறைந்த காரணத்தினால் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி கெஞ்சி திமுகவில் சேர்க்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று வால்பாறையில் பேசிய அவர்; திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 52 மாத ஆட்சியில், வால்பாறை சட்டப் பேரவை தொகுதிக்கு ஏதாவது புதிய திட்டங்களை கொண்டு வந்தார்களா? தேர்தல் நேரத்தில் 525 அறிவிப்புகளை வெளியிட்டு கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை மறந்தது திமுக அரசு. திமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தவில்லை.
அதிமுக ஐசியூ-வில் உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். ஆனால் திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு குறைந்த காரணத்தினால் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி கெஞ்சி திமுகவில் சேர்க்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, திமுகதான் ஐசியூ-வில் உள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவது. கொள்கை என்பது நிரந்தரமானது.
அதிமுக ஆட்சியில் பல நிறுவனங்கள் தமிழகத்துக்கு வந்தன. பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2015-ல் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி ரூ.2.48 லட்சம் கோடி முதலீடு ஈர்த்தார். 2019-ல் அதிமுக ஆட்சியில் முதலீட்டாளர் மாநாடு நடத்தி 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி முதலீடு ஈர்த்தோம். திமுக ஆட்சியின் நடவடிக்கை வெறும் ஏட்டளவில் தான் உள்ளது என்றார்.



