ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் சாலையோரம் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் சந்தேக மரணம் என விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், பிரேத பரிசோதனை முடிவில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், சுகுணாவுடன் நீண்டகாலமாக பழகி வந்ததாக கூறப்படும் தவுபிக்கை கைது செய்துள்ளனர்.
சுகுணாவின் மரணத்தைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பியதுடன், குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் ஈரோடு-பவானி சாலையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (31). ஓட்டுநராக பணியாற்றி வரும் இவருக்கு சுகுணா (26) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில், சுகுணாவுக்கும் இஸ்மாயில் மைதீன் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தவுபிக் (28) என்பவருக்கும் பல ஆண்டுகளாக பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இருவருக்கும் இடையேயான தொடர்பு ஏற்கனவே கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் இரண்டு முறை புகார் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது இருவரையும் அழைத்து போலீசார் அறிவுரை கூறி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், சம்பவத்துக்கு முந்தைய நாள் சுகுணா தவுபிக்கின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், தவுபிக் சுகுணாவின் கழுத்தை நெரித்ததாகவும், அதில் அவர் மயங்கி விழுந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுகுணா உயிரிழந்ததை அறிந்த பின்னர், அவரை வீட்டுக்கு வெளியே கொண்டு சென்று சாலையோரத்தில் விட்டுவிட்டு தவுபிக் அங்கிருந்து சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அடுத்ததாக, சாலையோரத்தில் சுகுணா மயங்கிய நிலையில் கிடந்ததை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கவனித்துள்ளனர். உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சுகுணாவின் உடல் முதலில் ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. பின்னர் அங்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் மாற்றப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்துக்கான காரணம் தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், சுகுணாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி 300-க்கும் மேற்பட்ட உறவினர்கள் பி.பி.அக்ரஹாரம் பகுதியில் திரண்டனர். ஈரோடு-பவானி சாலையில் மறியலில் ஈடுபட்ட அவர்கள், சுகுணாவின் மரணத்துக்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். சாலையில் கற்கள் மற்றும் பலகைகளை வைத்து மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த போலீஸ் அதிகாரிகள் அங்கு சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தவுபிக் மீது நேரடியாக குற்றச்சாட்டு முன்வைத்த உறவினர்கள், அவரை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து போலீசார் தவுபிக்கை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை காணொலி அழைப்பு மூலம் சுகுணாவின் உறவினர்களுக்கு காண்பித்த பின்னரே அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு சாலை மறியல் முடிவுக்கு வந்தது.
போலீஸ் விசாரணையில், தவுபிக் ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவருக்கு குழந்தைகள் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. சம்பவத்தின்போது ஏற்பட்ட தகராறில் சுகுணாவின் கழுத்தை நெரித்ததே அவரது மரணத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனையிலும் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான காரணத்தால் சுகுணா உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேக மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. தற்போது தவுபிக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read: மனைவியை பிரிந்த நாஞ்சில் விஜய்? திடீரென வெளியான பதிவு.. மீண்டும் பரபரப்பை கிளப்பிய வைஷூ விவகாரம்!



