கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வருகின்ற 5ஆம் தேதி கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அந்தவகையில், முகாமில் முன்னேற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொள்ள தற்பொழுது வரை 257 நிறுவனங்கள் பதிவு செய்து உறுதிப்படுத்தியுள்ளனர்.
15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நிறுவனங்கள் பதிவு செய்வதற்கான இணையதளம் இயங்கி வருகிறது. வேலைவாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள், இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் இந்த முகாமில் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.10,000 கீழ் இருக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்.
அதேபோல் முகாம் நடைபெறும் நாட்களில் உணவு, குடிநீர் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். கல்லூரியின் சார்பிலும் வேலைவாய்ப்பிற்கு வரும் இளைஞர்களுக்கு வழி காட்டுவதற்கு உதவியாளர்கள் உள்ளனர். பொறியியல், ஹெல்த் கேர் உட்பட அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களும் இதில் கலந்து கொள்கின்றன. இதில் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நிறுவனங்கள் வருகை புரிவர். பெரும்பாலும் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் என தெரிவித்தார்.