திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுனை சேர்ந்த நபர் ஒருவர் ஓட்டலில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் ஆரணியில் வசித்து வந்துள்ளார். இவரது 13 வயது மகள் ஆரணி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் சிறுமி வழக்கம் போல் ஆரணி டவுன் காஜிவாடை பகுதியில் நின்று பள்ளிக்கு வேனில் சென்றுள்ளார். மாலை பள்ளி வேனில் வந்து ஆரணி காஜிவாடை பகுதியில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியில் மண்ணெண்ணெய் கடை வைத்திருக்கும் 55 வயது ஜனார்தனன் என்பவரது வீட்டில் வேலை செய்யும் 57 ராஜேஸ்வரி, அந்த சிறுமியிடம் சென்றுள்ளார். பின்னர் சிறுமியிடம், ஜனார்தனன் கடைக்கு சென்றால், உனக்கு பிஸ்கட், சாக்லேட் எல்லாம் தருவார் என கூறியுள்ளார்.
இதற்க்கு ஆசைப்பட்டு சிறுமியும் ஜனார்தனன் கடைக்கு சென்றுள்ளார். சிறுமிக்காக கடையின் வெளியில் காத்திருந்த ஜனார்த்தனன், சிறுமி வந்ததும் உள்ளே வா சாக்லேட் தரேன் என்று கூறி கடையின் உள்ளே சிறுமியை அழைத்து சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், கடைக்கு ஓடிவந்து பார்த்துள்ளனர். அப்போது, ஜனார்தனன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் சிறுமியை மீட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கடை உரிமையாளர் ஜனார்தனன், அவருக்கு உடந்தையாக இருந்த ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர், திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனார். இந்த சமபவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.