வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சிகளும் களப்பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் தொகுதி பேரத்தை தொடங்கி, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
மற்ற கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை திமுகவில் இணைக்கும் பணியை செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதன்படி கடந்த சில நாட்களாக செந்தில்பாலாஜி கரூரில் முகாமிட்டு மாற்றுக் கட்சியினரை திமுகவுக்கு இழுத்து வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்க திமுக முக்கிய நிர்வாகிகளை தன் வசம் இழுக்க அதிமுக மும்மரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது திமுகவிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகி அதிமுக கட்சியில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் திமுகவின் சிவகாசி மாநகர தொழிலாளர் பிரிவு அமைப்பாளர் நாகராஜன், ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் பட்டாசு தொழிலதிபர் சந்தன பாண்டியன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் இணைந்துள்ளனர். 2021 தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Read more: எல்லாம் அதிமுக செய்ய வேண்டும் என்றால்.. நீங்க எதுக்கு சார் முதல்வராக இருக்கீங்க…? EPS சரமாரி கேள்வி…



