குழந்தைகள் அடிக்கடி அடம் பிடிக்கிறார்களா? ஒவ்வொரு முறையும் அதை குறும்பு அல்லது பிடிவாதம் என்று நினைத்துவிட வேண்டாம் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சில நேரங்களில் குழந்தைகளின் உணவுப் பழக்கம், தூக்கமின்மை, அதிக திரை பயன்பாடு அல்லது மனஅழுத்தம் போன்ற காரணங்களாலும் அவர்கள் எரிச்சலாகவும், அடிக்கடி கோபப்படுபவர்களாகவும் மாறலாம். எனவே, முதலில் அதன் காரணத்தை கண்டறிவதே முக்கியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மருத்துவர்களின் விளக்கப்படி, 2 முதல் 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி பிடிவாதம் பிடிப்பது வளர்ச்சியின் ஒரு இயல்பான பகுதியாக இருக்கலாம். ஆனால் அது தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு அதிகமாக இருந்தால், அதற்கான காரணத்தை பெற்றோர் கவனிக்க வேண்டும். போதுமான தூக்கம் இல்லாத குழந்தைகள் அதிகமாக எரிச்சலடைவார்கள். வயதுக்கு ஏற்ற அளவில் தூங்காதபோது, அவர்கள் சிறிய விஷயங்களுக்குக் கூட கோபப்படலாம். அதேபோல், பசி அல்லது சத்தான உணவுகள் குறைவாக இருப்பதும் குழந்தைகளின் மனநிலையை பாதிக்கக்கூடும். அதிக நேரம் செல்போன், டிவி அல்லது டேப்லெட் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு பொறுமை குறைவதும், அவர்கள் விரும்பியதை உடனே கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும் அதிகரிக்கலாம்.
இதனால் அவர்கள் அடிக்கடி அடம் பிடிக்கத் தொடங்குவதாக குழந்தைகள் நல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள் பேச விரும்பும் விஷயங்களை பெற்றோர் கவனமாகக் கேட்பதும், அவர்கள் உணர்வுகளை புரிந்துகொள்வதும் மிகவும் அவசியம். அடம் பிடிக்கும் ஒவ்வொரு முறையும் சத்தம் போடுவதோ அல்லது அடிப்பதோ பிரச்சினையை மேலும் அதிகரிக்கலாம். அதற்கு பதிலாக அமைதியாக பேசுவது, மாற்று வழிகளைச் சொல்வது மற்றும் நல்ல செயல்களை பாராட்டுவது சிறந்த பலனை தரும். ஒரு குழந்தை தொடர்ந்து அதிக கோபம், கட்டுப்படுத்த முடியாத அடம்பிடித்தல், பள்ளிக்குச் செல்ல மறுத்தல் அல்லது மற்றவர்களுடன் பழகுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளை நீண்ட நாட்களாகக் காட்டினால், குழந்தைகள் நல மருத்துவர் அல்லது குழந்தைகள் உளவியல் நிபுணரை அணுகுவது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குழந்தைகளின் அடம்பிடித்தலை வெறும் பிடிவாதமாக மட்டும் பார்க்காமல், அதன் பின்னால் இருக்கும் காரணத்தை புரிந்துகொண்டு அன்புடனும் பொறுமையுடனும் அணுகினால், பல பிரச்சினைகளை எளிதாக சமாளிக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read: ஸ்பூனில் சாப்பிடுறீங்களா? கையால் சாப்பிடுவதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை முதலில் தெரிஞ்சுக்கோங்க!


