சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.. குறிப்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
அண்ணாமலை குறித்து விமர்சித்தால் அது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும், ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்படாதா என பலரும் காத்திருப்பதாகவும் அதனால் அண்ணாமலையை விமர்சிக்க வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.. அவர் அதிமுக பற்றியோ அல்லது அதிமுக தலைவர்களை பற்றியோ எந்த விமர்சனத்தையும் முன் வைப்பதில்லை.. எனவே நாம் அவரை விமர்சிக்கும் வகையிலோ அல்லது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலோ பேச வேண்டாம் எனவும், அண்ணாமலை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்..
மேலும் விஜய் புதிதாக கட்சி தொடங்கி இருப்பதால், தொண்டர்களை உற்சாகப்படுத்த எதையாவது பேசுவார்.. எனவே விஜய் குறித்து பேச வேண்டாம், விஜய் பேச்சுகளை கண்டுகொள்ள வேண்டாம் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்..
மேலும் தேர்தல் களம் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளதாகவும் அவர் பேசி உள்ளார்.. இதுவரை சுற்றுப்பயணம் மேற்கொண்ட 118 தொகுதிகளில் 100 தொகுதிகளில் வெற்றி உறுதி எனவும் அவர் பேசி உள்ளார்..
2 ஆண்டுகள் அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்த போது, அண்ணாமலை – அதிமுக தலைமை இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.. இதனால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.. அதிமுக முன்னாள் தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அண்ணாமலை பேசியிருந்தார்.. அதற்கு அதிமுகவினரும் அண்ணாமலையை விமர்சித்து பேசியிருந்தனர்.. அதிமுகவை ஊழல் கட்சி என்றும், எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கினார்..
அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உறுதியான பின்னரும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் எனவும் அண்ணாமலை பேசியிருந்தார்.. இந்த சூழலில் அண்ணாமலை – அதிமுக தலைமை இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.. இதன் எதிரொலியாகவே தற்போது அண்ணாமலையை விமர்சிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.. அதே போல் அண்ணாமலையும், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டியது நம் பொறுப்பு என்றும், அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமைய பாஜகவினர் உழைக்க வேண்டும் என்றும் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : விஜய்யின் அரசியல் வருகை.. திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டியா? ஓரே வரியில் முதல்வர் சொன்ன ‘நச்’ பதில்!