சிவகங்கை அருகே காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தங்களது சொகுசு காரில் பழலை நகர் கொடிக்காடு கண்மாய் பகுதிக்கு வந்துள்ளனர். அங்குள்ள ஒரு பெரிய ஆலமரத்தின் நிழலில் காரை நிறுத்திவிட்டு, அதன் அருகே அமர்ந்து இருவரும் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு விரைந்து வந்த மர்ம நபர்கள் அடங்கிய கும்பல் ஒன்று, திடீரென அந்த இளைஞர்களை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்தது. தங்களைக் கொலை செய்யவே கும்பல் வந்துள்ளது என்பதை உணர்ந்து சுதாரித்த அந்த இரு இளைஞர்களும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளக் கண்மாய் பகுதியை நோக்கி நாலாபுறமும் அலறியடித்து ஓடினர்.
இருப்பினும் விடாமல் விரட்டிச் சென்ற அந்தக் கொலைவெறி கும்பல், இருவரையும் கண்மாய் பகுதியில் சுற்றி வளைத்துப் பிடித்தது. பின்னர், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரின் தலை மற்றும் உடல்பாகங்களில் கண்மூடித்தனமாக வெட்டிச் சாய்த்தது. இதில் பலத்த வெட்டுக் காயங்களுடன் தலை சிதைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர். கொலை வெறியாட்டம் முடிந்ததும் அந்தக் கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் மின்னல் வேகத்தில் தப்பியோடியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகங்கை போலீஸார், ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த இரு இளைஞர்களின் உடல்களையும் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காகச் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டார். முன்விரோதம் காரணமாக இந்தக் கொடூரக் கொலை அரங்கேறியதா என்ற கோணத்தில் தனிப்படை அமைத்துப் போலீஸார் தப்பியோடிய மர்ம கும்பலை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.



