தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளில் உள்ள பயனாளிகளின் விவரங்களை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி கைவிரல் ரேகை பதிவு (eKYC) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) குடும்ப அட்டைகளில் உள்ள ஆதார் விவரங்களைச் சரிபார்க்கும் நோக்கில், மின்னணு குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் விரல் ரேகை அடிப்படையிலான eKYC சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி, கடந்த 2023 அக்டோபர் முதல் இப்பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலவரப்படி முன்னுரிமைக் குடும்ப அட்டைகளில் 96.48% சரிபார்ப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து 100% இலக்கை எட்டும் நோக்கில், செப்.19ம் தேதி தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை முழு நேரச் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. (இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இம்முகாம் செயல்படும்).
எனவே, இதுவரை ரேஷன் கடைகள் வாயிலாக தங்களது கைரேகைப் பதிவினை மேற்கொள்ளாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும், தங்களுக்குரிய நியாய விலைக் கடைகளில் நடைபெறும் இந்தச் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு தங்களது eKYC சரிபார்ப்பை உடனே நிறைவு செய்துகொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.



