விழுப்புரத்தை அடுத்த வளவனூர் தோப்பு காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர்(31). இவர் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த ஏப்ரல் 19ம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தூங்கியுள்ளார். அப்போது அதிகாலை 4 மணியளவில் டவுசர் மட்டுமே அணிந்திருந்த 3கொள்ளையர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
அறையில் தூங்கிக்கொண்டிருந்த ராஜசேகரின் மனைவி கங்காதேவியின் (30) கழுத்தில் அணிந்திருந்த 4.5 பவுன் நகையை பறிக்க முயன்றுள்ளனர். தூக்கத்திலிருந்து எழுந்த கங்கா தேதி கத்தி கூச்சலிடவும், தூங்கிக்கொண்டிருந்த ராஜசேகர் உடனடியாக எழுந்து மின்விளக்குகளை போட்டிருக்கிறார். அதற்குள் அந்த கொள்ளையர்களில் ஒருவன் ராஜசேகரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியும், மற்றொருவன் ராஜசேகரின் குழந்தையை இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்று விடுவதாகவும் மிரட்டியிருக்கிறான்.
அந்த சமயத்தில் மற்றொரு கொள்ளையன், கங்காதேவியின் கழுத்தில் அணிந்திருந்த 4.5 பவுன் நகையை பறித்தான். பின்னர் அந்த கொள்ளையர்கள் 3 பேரும் அங்கிருந்து வீட்டின் பின்புற தோட்டம் வழியாக தப்பி சென்றுள்ளனர். வீட்டில் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் முன் திரண்டனர். கொள்ளையர்களை பொதுமக்கள் உதவியுடன் ராஜசேகர் பிடிக்க முயன்றுள்ளார்.
இருப்பினும் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டவுசர் கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போலீஸ் வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



